திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் கூலித் தொழிலாளி தம்பதியின் மகளான சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வானாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுபாவின் பக்கத்து வீட்டில் பெரியப்பா சங்கர் குடும்பம் வசித்து வருகிறது. சங்கர் மகன் பிரசாந்த்தை சந்திக்க பக்கத்து தெருவை சேர்ந்த அவரது நண்பன் தமிழரசன் என்கிற இளைஞர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். பிரசாந்த்தை சந்திக்க வந்த தமிழசரனுக்கு பக்கத்து வீட்டிலிருந்த சுபாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது பிரசாந்த்துக்கும் தெரிந்துள்ளது. மேலும் பிரசாந்த் தனது நண்பனுக்கும் – தங்கைக்கும் இடையே இணைப்பாக இருந்துள்ளான்.
நெருங்கிய நண்பர்களாக இருந்த பிராசாந்த் – தமிழரசன் இடையே சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இருவரும் பேசிக் கொள்வதில்லையாம். மார்ச் 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சுபாவிடம் தமிழரசன் சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்த பிரசாந்த், தமிழரசனை இரண்டு அடி அடித்துவிட்டு, தனது சித்தப்பா மகள் சுபாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சுபா சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிணற்றின் உரிமையாளர், சுபா தற்கொலை செய்து கொண்டதை கண்டு தகவல் சொல்ல ஊர்க்காரர்கள் சென்று உடலை மீட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாந்த் மீது வானாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
“என் மகள் அவனை காதலிக்கவில்லை; காதலித்ததாக நினைத்துக் கொண்டு அவன் கிட்ட எல்லாம் பேசாத என அடித்து உதைத்து தெருவில் இழுத்து வந்துள்ளான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளாள் என் மகள். என் மகள் தவறு செய்தால் பெற்றவர்களான எங்களிடம் தானே சொல்ல வேண்டும். அவளை அடிக்க அவன் யார்? இப்போது என் மகள் செத்துப் போனாளே... அவளை அவன் திருப்பி கொண்டு வருவானா?” எனக் கேள்வி கேட்டு அழுதிருக்கிறார் அந்த தாய்.