Published on 06/05/2020 | Edited on 06/05/2020
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை கிரிவலம் என்பது தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதுவே சித்திரை மாத பௌர்ணமி என்றால் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
தற்பொழுது கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வழிப்பாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்திலும் பொதுமக்கள் கலந்துக்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மே 6ந்தேதி இரவு 7.45 முதல், மே 7ந்தேதி மாலை 5 மணிவரை பௌர்ணமி நாள். 144 சட்டம் அமலில் உள்ள நாளில் இந்த பௌர்மணி வருவதால், கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று கிரிவப்பாதை முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதனையும் மீறி யாராவது கிரிவலம் வருகிறார்களா என காவல்துறை சார்பில் ட்ரோன் மூலம் கண்காணிக்கின்றனர். அதோடு கிரிவலப்பாதையில் அநாவசியமாக யாரும் செல்லாதபடி காவல்துறை பாதுகாப்பு வளையத்தை அதிகப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் சார்பில், சித்திரை மாத பௌர்ணமிக்காக உண்ணாமுலையம்மனுடனான அண்ணாமலையார்க்கு சிறப்பு பூசைகள் செய்தனர். அதனை இணையதளம் வழியாக ஒளிப்பரப்பு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் வந்த பௌர்ணமியன்றும் இதேபோல் யாரும் செல்ல முடியாதபடி தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.