திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் சோலையம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினர் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்த வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் 3 ஆண் குழந்தை உள்ளது.
ஐந்தாவதாக கர்பமாகியுள்ளார் சோலையம்மாள். பிரசவத்துக்காக ஆரணி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14ந்தேதி மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தபின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற சோலையம்மாள் – குமார் தம்பதியினர் வீட்டில் இல்லையாம். இது தொடர்பாக கிராம செவிலியர்கள் விசாரித்தபோது யாரும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.
இந்நிலையில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனந்தன், ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் பெண் குழந்தை மற்றும் குழந்தையின் தாயார் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் போலிஸார் சோலையம்மாளின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்த சென்றபோது, வீடு பூட்டியிருந்துள்ளது.
அருகில் உள்ள சோலையம்மாள் தங்கை மலர் வீட்டில் விசாரித்தபோது, குமாரின் பிள்ளைகள் அங்கு இருப்பதும், தம்பதியினர் மற்றும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை இல்லாமல் இருப்பதை தெரிந்துள்ளனர். விசாரணைக்காக மலர் மற்றும் குமாரின் 15 வயதுடைய லஷ்மியை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் காவலர்கள் என்பது குறிப்பிடதக்கது.
போலிஸ் தரப்பிலோ "குழந்தையின் பெற்றோர் பி.எச் சென்டரில் தந்த செல்போன் எண் சுச் ஆப் நிலையில் உள்ளது. குழந்தையின் பெற்றோர் வேலைக்கு போகிறோம் எனச்சொல்லிவிட்டு சென்னைக்கு போய்விட்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.
இதுப்பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, அந்த குழந்தை இறந்துவிட்டதாக தகவல் கூறினார்கள். குழந்தையை இங்கு கொண்டு வரவேயில்லை. குழந்தையை விற்று விட்டார்கள் என நினைக்கிறோம் என தகவல் சொல்லியுள்ளார்கள்.