திருவண்ணாமலை நகரில் உள்ளது அரசு கலைக்கல்லூரி. பொன்விழா கொண்டாடிய இந்த கல்லூரியில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மாணவ – மாணவியர் சேர்க்கை மே 27ந்தேதி தொடங்கியது.
கலந்தாய்வுக்கு மாணவர்களை அழைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இளங்கலை ஆங்கிலத்துக்கான சேர்க்கை நடைபெற்ற நிலையில் கல்லூரி வளாகத்துக்கு வெளியேவும், உள்ளேயும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும், பால்டெக்னிக்குகளும் கேம்ப் போட்டு மாணவ – மாணவிகளை கேன்வாஸ் செய்தது. இந்த நிகழ்ச்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
சன் கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் கலை அறிவியல் கல்லூரி, சண்முகா இன்டஸ்ட்ரீயல் கலை அறிவியல் கல்லூரி, அல்-அமீன் கலை அறிவியல் கல்லூரி, அருணா வித்யா கலை அறிவியல் கல்லூரி, சிஷ்யா கலை அறிவியல் கல்லூரி, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி போன்றவை அரசு கலைக்கல்லூரியின் பிரதான நுழைவாயிலின் முன் பந்தல் அமைத்து, டேபிள் போட்டு அமர்ந்து தங்களது கல்லூரியை பற்றி விளம்பரம் செய்தனர். கல்லூரிக்குள்ளும் சென்று தனியார் கல்லூரிகளின் நோட்டீஸ்களை தந்து மாணவ – மாணவிகளின் பெற்றோர்களிடம் கேன்வாஸ் செய்தனர்.
தனியார் கல்லூரிகளின் இந்த அட்டகாசத்தை அரசு கல்லூரி பேராசிரியர்கள், நிர்வாகம், ஊழியர்கள் உட்பட யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த செயலை கண்டு அதிர்ச்சியான, அரசு கல்லூரி மீது அக்கறை கொண்ட ஒருவர் இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தகவல் தந்தார். அவர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் உடனே நடவடிக்கை எடுங்கள் எனச்சொல்ல, அதிரடிப்படையினருடன் வந்து, தனியார் கல்லூரி ஊழியர்களை போலிஸ் வாகனத்தில் ஏற்றி உட்காரவைத்தனர். டேபிள் சேர்களை தூக்கிக்கிட்டு போங்க, பேனர்களை கழட்டலன்னா கிழிச்சி எறிஞ்சிடுவோம் என எச்சரித்தனர். உடனே எல்லாவற்றையும் மூட்டை கட்டிய தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், தாங்கள் வந்த விளம்பர பேருந்துகளிலேயே அவற்றை ஏற்றி கிளம்பினர்.
போலிஸ் வாகனத்தில் உட்கார வைக்கப்பட்ட தனியார் கல்லூரி விரிவுரையாளர்கள், எங்க மேனேஜ்மெண்ட் சொன்னதால் தான் இங்க வந்தோம் என கண்ணீர் விட்டதால் அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.