ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், “தேசிய நெடுஞ்சாலைகளில் ஆறு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பயணத்திற்கான கால நேரங்களை விரயம் செய்து வருகின்றனர்.
அனைத்து அரசியல் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் வருகின்ற வாரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி அனைத்து பொது அமைப்பினரை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர இருக்கிறோம். போராட்டத்தின் போது பேச்சுவார்த்தைக்கு வரக்கூடிய அதிகாரிகள் சாலை விரிவாக்கப் பணிகளில் முடிவு நாட்களை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.
விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் மற்றும் மருந்துகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு செய்து தர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும். மழைக் காலங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து காய்கறிகள் தேக்கமடைவதன் காரணமாக அழுகி பாதிப்புக்குள்ளாகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் விளைகின்ற காய்கறிகளை பதப்படுத்தும் விதமாக அனைத்து விவசாயப் பகுதிகளிலும் குளிர்சாதன கிடங்குகளை அமைத்து காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதன் மூலம் பதப்படுத்தி வைக்கப்படுகின்ற காய்கறி பொருட்களை தடையின்றி வழங்கும்போது விலைவாசி உயர்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைவாசி உயர்வுக்கு, டோல்கேட் கட்டணம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகவே உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலைவாசி உயர்வுகளுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல எனவும் விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.