திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. நவம்பர் 19ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படவுள்ளன.
கரோனாவை முன்னிட்டு சாமி வீதியுலா உட்பட பல நிகழ்ச்சிகள் கோயிலுக்குள் மாற்றப்பட்டன. அதோடு உள்ளுர் மக்கள் 3 ஆயிரம் நபர்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 7 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக டிக்கட் பெற்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதிமுதல் நவம்பர் 20ஆம் தேதிவரை கிரிவலம் வரவும், கோயிலுக்குள் சாமி தரிசனத்துக்கும் பொதுமக்களுக்கு முற்றிலும் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் வெளியூர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் திருவண்ணாமலை வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கட் பெற்றுள்ள உள்ளுர், வெளிமாவட்ட, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். 16ஆம் தேதி இரவோடு ஆன்லைன் இலவச டிக்கட்களின் காலக்கெடு முடிந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.
அதோடு திருவண்ணாமலை நகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்ரமங்கள் போன்றவற்றில் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தைச் சேர்ந்த யாருக்கும் அறைகள் தர வேண்டாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி யாராவது தங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய திடீர் சோதனைகள் நடத்த உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி. பவன்குமார்.