திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்காவில் உள்ளது செங்கபுத்தேரி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக கொங்கரன் கால்வாய் செல்கிறது. கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு நிதியாண்டில் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கால்வாயின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டது.
அந்த தடுப்பணை ஒன்றை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பாலாஜி தலைமையில் 20 பேர் கொண்ட குழு, கால்வாய் குறுக்கே நீரை சேமித்து வைக்க கட்டப்பட்ட தடுப்பணையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளியுள்ளனர். அவர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாய பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த தடுப்பணையால் தான் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் தான் இடிக்கிறோம் எனச்சொல்லியுள்ளனர்.
ஏரிக்கு நீர் போகும் முன் அந்த வழியாகவுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிணறுகள் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்பதற்காகவே கால்வாய்களின் குறுக்கே விவசாயத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கூறி கட்டினார்கள்.
அதனை சிலர் தங்களது சுய நலத்துக்காக இடித்து தள்ளியுள்ளனர். பொது சொத்தான தடுப்பணையை இடித்து தள்ளியதில் வில்வாரணி, செங்கப்புத்தேரி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனை தணிக்க சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் தைரியமாக இடித்தார்கள், இடிக்கும் போதே வருவாய்த்துறையினருக்கு தகவல் சொல்லியும் அவர்கள் அதுப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.