நடிகர் சிவாஜியின் 91வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினாவில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை போன்றவை இப்போது இருந்ததைவிட பாதி விலையில்தான் இருந்தது. அதற்கே பாஜக அப்போது நாடு முழுவதும் காங்கிரஸ் அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது. ஆனால் இப்போது பாஜக ஆட்சியில் தினம் தினம் விலையை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல் விலையை உயர்த்தி 4 ஆண்டில் மக்கள் பணம் ரூபாய் 11 லட்சம் கோடியை மத்திய அரசு சுரண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எதிர்க்கட்சிகள் எந்த ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் மத்திய அரசு கவலைப்படாமல் உள்ளது. மக்கள் மீதுதான் சுமையை ஏற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த விழா மோசமாக நடத்தப்பட்டுள்ளது. எம்ஜிஆருக்கு புகழ் சேர்க்கும் விழாவாக நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளை விமர்சிக்க நடத்தப்பட்ட விழா. இவ்வாறு கூறினார்.