ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேஸ்வரம் கடல் பகுதியில், வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால், நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை.
இன்று மாலை பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டது. மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு கடல்காற்று வீசியதால், மாலை 5 மணிக்கு புறப்பட்ட சென்னை விரைவு ரயில், 15 நிமிடம் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ரயிலை இயக்க அனுமதி கிடைத்ததை அடுத்து, அந்த ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது.
"வழக்கமாக அமாவாசை சமயத்தில் கடல் சீற்றம் இருக்கும். ஆனால், இந்த முறை கடற்கரையில் படகை நிறுத்த முடியாத அளவுக்கு அலையின் சீற்றம் இருப்பதாக" தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார்.