இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமை தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து. இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மனிதர்களை கொலை செய்கிறது, சுற்றுச்சூழலை சீர்குலைக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், சாட்சியங்களும் இருக்கும் போதிலும், அவை அனைத்தையும் கடந்து ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த திசம்பர் 15-ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த திசம்பர் 22-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. பசுமைத்தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து தமிழக அரசும், உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையும் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு பின்னடைவாகும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதல் அதனால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழு வரை அனைத்தும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாகவே செயல்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படவில்லை. மாறாக, ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் நியாயப்படுத்தப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஒருதலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அதைத் தான் உச்சநீதிமன்றமும் இப்போது உறுதி செய்துள்ளது. எனினும், இது இடைக்கால உத்தரவு தான். வழக்கு விசாரணையின் முடிவில் தான் இறுதித் தீர்ப்பு வெளியாகும். இம்முடிவே இறுதித் தீர்ப்பாக வருவதற்கும் வாய்ப்புள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் ஆலை மூடப்பட்டது வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களையும், அரசையும் ஸ்டெர்லைட் ஆலை ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006-ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தேவையான சுற்றுச் சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை ஏமாற்றியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை. 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைப் போக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
பாமக ஏற்கனவே கூறி வருவதைப் போல மத்திய அரசும், நீதிமன்றங்களும் இத்தகைய பிரச்சினைகளை தொழில் வளர்ச்சி என்ற கோணத்தில் தான் பார்க்கின்றன. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவருகிறது. தமிழ்நாட்டில் தாமிர ஆலைகளுக்கு அனுமதியில்லை என்று கொள்கை முடிவு எடுத்து, அதற்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும். எனவே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை சில நாட்கள் நீட்டித்தோ அல்லது இதற்காக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியோ தனிச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். என கூறியுள்ளார்.