காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ல் நேரில் ஆஜராகும்படி அத்தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு சம்மன் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் விட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவித்ததைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அதன் தலைவர் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 102 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் மனுதரார் தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசுவாமியை சாட்சியாக விசாரிக்கும்போது, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை சமர்ப்பிக்கும்படி மனுதாரரோ, எதிர் மனுதாரரோ கோரவில்லை என குறிப்பிட்ட நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் முன் நிராகரிக்கப்பட்ட 102 தாபல் வாக்குகளை ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துக்குமாரசுவாமி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.