நாகை மாவட்டம் நாகூர் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இக்சான்னுல்லா. இவர் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டி விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது தனது இருசக்கர வாகனம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் தள்ளிச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது இக்சான்னுல்லா, கண்காணிப்பு சிசிடிவி காட்சிகளுடன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரம் என குற்ற சரித்திர பின்னணி கொண்ட நாகை வ.உ.சி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இவர் மீது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
மேலும் போலீசாரிடம், சாராயம் வித்தா புடிக்கிறீங்க... கஞ்சா கடத்துனா புடிக்கிறீங்க... தொழிலே மாத்த போறேன் எப்படி புடிக்கிறீங்கன்னு பாப்போம் என்று சொல்லி போனவர் அடுத்த நாளே வீட்டின் அருகில் பதுங்கி இருந்த நிலையில, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருடிய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர். பிடிபட்ட கார்த்திகேயனை போலீசார் தங்களது இருசக்கர வாகனத்தில் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையம் எதிரே வந்த பொழுது திடீரென மயக்கம் வருவதாகவும் பசிக்குது சாப்பாடு வாங்கிக் கொடுங்க எனக் கூறி தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த போலீசாரிடம் இருந்து தப்பிக்க நடு ரோட்டில் உருண்டு புரண்டு அலப்பறையில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களைக் கண்டதும் அய்யோ அடிக்கிறாங்க நான் ஒன்னுமே பண்ணல வீடியோ எடுங்க, வீடியோ எடுங்க என்று கத்தி கூச்சலிட. அவரை போலீசார் ஆட்டோவில் ஏற்ற முடியாமல் திணறினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசாருடன் மல்லுக் கட்டிய கார்த்திகேயனை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்டு அழைத்துச் சென்றனர். வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே நடந்த இச்சம்பவத்தை நூற்றுக்கணக்கானோர் அங்கு நின்று வேடிக்கை பார்த்த நிலையில், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சக போலீசாருக்கு உதவி செய்ய வரவில்லை. ஆட்டோவில் திருடனை ஏற்றிய பிறகு அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்று கெத்து காட்டினர்.
இதனையடுத்து பைக் திருடன் கார்த்திகேயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். டூவீலர் திருடன் போலீசாரிடம் மல்லுக்கட்டிய சம்பவமும் காவல் நிலையம் அருகே நடந்தபோதும் வெளிப்பாளையம் காவல்துறையினர் சக காவல்துறையினர்க்கு உதவிக்கு வராததும் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.