வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேக்கமடைந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று சென்னையில் பல இடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்று கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
சீர்காழியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நேற்று முன்தினமே செந்தில் பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய மூன்று அமைச்சர்களையும், இங்கே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரையும் அனுப்பி வைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வைத்தேன். மாவட்ட ஆட்சியர் பிரமாதமாக ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்கள் மட்டும் பார்த்தால் போதாது, நானும் போக வேண்டும் என்ற முடிவோடு நேற்று இரவோடு இரவாக பாண்டிச்சேரியில் தங்கி காலையில் 7:30 மணிக்கே எழுந்து எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருப்தியாக இருக்கிறது வேலை.
மக்கள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிறு குறைகள் இருக்கிறது. அதுவும் விரைவில் இன்னும் ஐந்து, ஆறு நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்லிட்டு இருப்பாங்க. அதெல்லாம் கேட்க முடியாது. எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சனம் பண்ணுவதற்காகவே, கேவலப்படுத்துவதற்காகவே, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகவே ஏதேதோ சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதுக்கேற்ற மாதிரி கணக்கெடுக்கப்பட்டு அந்த அடிப்படையில் இழப்பீடுகள், நிவாரணங்கள் வழங்கப்படும்.'' என்றார்.