ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பெற்றிருப்பது ஒரு நீண்ட காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஒரு நீண்ட நெடிய ஏக்கத்தைத் தணிக்கிற ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் தன்னியல்பாக அதிகாரத்தை கையிலெடுத்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆறு பேரில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களை சிறப்பு முகாமில் அடைக்கக் கூடாது. இலங்கையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அங்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டுமென்று ஏற்கனவே விசிக சார்பில் சுட்டிக்காட்டி இருந்தோம். இப்பொழுது அந்த நால்வரையும் சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் வெளியில் காவல்துறையின் கண்காணிப்போடு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் உறவினர்களோடு தங்குவதற்குச் செல்ல விரும்பினால், அயல்நாடு செல்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.