மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நிவாரணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் பெய்த அதீத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்வேறு பகுதிகள் சிக்கி தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது.
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் பள்ளி பொதுத் தேர்வுகளில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளி போதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவும் இல்லை என அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது அந்த பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையால் பாட புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும். வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் திறந்து பிறகு மீதம் உள்ள அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்ட பிறகு பள்ளி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.