Skip to main content

“உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - அமைச்சர் துரைமுருகன்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

 "There is no other option but to go to the Supreme Court" - Minister Duraimurugan

 

டெல்லியில் இன்று நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். 

 

தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் நீர் திறக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ''காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை. காவிரி பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது நியதி. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வழக்கம் போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது கர்நாடகம். விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி வென்று நீரை பெற்றுத் தருவோம்.

 

 "There is no other option but to go to the Supreme Court" - Minister Duraimurugan

 

ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை காவிரியில் தமிழகத்திற்கு 53 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இதில் தற்போது வரை 15 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. இதனால் தஞ்சை தரணியில் காவிரி நீரை எதிர்பார்த்து நிற்கும் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் தர வேண்டும் என்ற மனநிலையும் இல்லை. காவிரி பிரச்சனை என்றைக்கு தோன்றியதோ அன்று முதல் இந்த நிலையை கர்நாடக அரசு எடுத்து வருவது வருத்தத்திற்குரியது.

 

பயிர்கள் காய்ந்தாலும் கவலை இல்லை என்ற உள்ளம் கர்நாடகத்திற்கு உள்ளது. தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சரை இரண்டு முறை சந்தித்தேன். நிலைமையை உணர்ந்து காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் விரைந்து செயல்பட வலியுறுத்தினேன். முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி நிலைமையை விளக்கியிருந்தார். ஆனாலும் இரு அமைப்புகளும் உடனே தனது பணிகளை ஆற்ற முன்வராமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியது'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்