பிரதமர் நரேந்திர மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை எனக் கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் ஆதிசங்கரர்சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியது தமிழகத்தில் 16 கோவிலில் ஒளிபரப்பானது. இதனை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று (10/02/2022) விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அது அரசியல் அல்ல, ஆன்மீக நிகழ்ச்சிதான். மத்திய அரசின் உத்தரவின் படியே பிரதமர் உரை கோவில்களில் ஒளிபரப்பப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, "பிரதமரின் பேச்சு முழுவதும் ஆதிசங்கரர் பற்றித்தான் இருந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை" எனத் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.