Skip to main content

“ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன” - செல்வப்பெருந்தகை பேட்டி!

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
There are many doubts in the incident of Jayakumar dhanasingh says Selvaperundhai

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார் தனசிங்கின் உடற்கூராய்வு நிறைவு பெற்று இன்று (05.05.2024) காலை 08.30 மணியளவில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான கரைச்சுத்து புதூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இதனையடுத்து பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

There are many doubts in the incident of Jayakumar dhanasingh says Selvaperundhai
கோப்புப்படம்

முன்னதாக ஜெயக்குமார் தனசிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மறைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின்  மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் இறந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்ட வேண்டும். அரசியல் பின்புலத்தோடு இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை தேசிய தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்