வேலூர் அடுத்த புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மீது பல்வேறு கொலை, கொள்ளை வழிப்பறி என 51 வழக்குகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு வழிப்பறி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ்(43). இவர் கடந்த 19-ம் தேதி இரவு வீட்டின் அருகே மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தங்கராஜிடம் ரவுடி வசூர் ராஜாவும், அவரது கூட்டாளிகளும் ரூ. 30 லட்சம் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும், அதனால் தங்கராஜ் பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தங்கராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தங்கராஜை தற்கொலைக்குத் தூண்டியவர்களைக் கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் லதா, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். பின்னர் தங்கராஜை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், ரவுடி வசூர்ராஜா வழிப்பறி வழக்கு ஒன்றில் குண்டாஸில் கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் இருந்தவாறே ஸ்கெட்ச் போட்டு, தனது கூட்டாளிகள் சிலரை வைத்து தங்கராஜை மிரட்டி 30 லட்சம் ரூபாய் கேட்டு அவரை தாக்கியதும், பணம் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கராஜ் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், கோவை சிறையில் உள்ள வசூர் ராஜா பார்மல் கைது செய்யப்பட்டு உள்ளார். விரைவில், வேலூர் போலீஸ் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் தான் வசூர் ராஜாவின் தாய் கலைச் செல்வி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், “என்மகன் வசூர் ராஜா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சுற்றி எப்போதும் போலீஸார் இருந்துகொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும்போது அவர் சிறையில் இருந்தவாறே பணம் பறிக்கத் திட்டம் போட்டதாகவும் அதனால் தங்கராஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சத்துவாச்சாரி போலீசார் சிறையில் இருக்கும் தன் மகன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். அதன் மூலம் என் மகனை என்கவுண்டர் செய்வதற்கு போலீசார் திட்டம் போட்டு இருப்பதாகத் தெரிகிறது.
என் மகனுக்கும் தற்கொலை செய்துகொண்ட தங்கராஜ் வழக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், அவரை இந்த வழக்கில் இணைத்து வெளியே வரவழைத்து என்கவுண்டர் போட முயல்கிறது போலீஸ். என மகன் திருந்தி வாழ உள்ளார். பொய் வழக்கில் இருந்து எனக் காப்பாற்றும்படியும் அவர் திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.