Skip to main content

உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத உறவினர்கள்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 Relatives hugged the body and cried

 

காதல் திருமணம் செய்துகொண்ட மூன்றே நாளில் கணவன் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் ஒப்படைக்கப்பட்ட உடல்களை பார்த்து கட்டிப்பிடித்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாரிசெல்வமும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் காதல் திருமணம் செய்துகொண்ட இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவரையும் பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதாகத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாகவும், ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் இருவரின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது உடல்களை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கட்டிப்பிடித்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.