துணைமுதல்வர் தொகுதியான போடி தொகுதிக்குட்பட்ட சிறைகாடு கிராமத்தைச் சேர்ந்த பளியர் இன மக்கள் கரோனா உதவி கேட்டு முதல்வரை சந்திப்பது என முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பளியர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் பளியர் பழங்குடியின மக்கள் நல சங்க மாநில சட்ட ஆலோசகர் ராஜன் கலந்து கொண்டு பேசியபோது, “போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறைகாடு கிராமத்தில் வசிக்கும் 36 பளியர் குடும்பத்தினருக்கு கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு வழங்கிய கரோனா நிவாரண நிதியான ரூ.1,000 கொடுக்காமல் ஏமாற்றியது குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் நிவாரண நிதி கிடைக்கவில்லை. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிவாரணம் கிடைக்காவிட்டால், சென்னை சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பளியர் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களான கொற்றவன்குடி, கரும் பாறை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பளியர் இன மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தரவேண்டிய பட்டா விளை நிலங்களை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பளியர் பழங்குடியினர் நல சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.