
விருத்தாசலம் அருகே பேருந்தில் பயணித்த நபரிடம் 53 பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ராஜவேல் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் ஜான்பாண்டியன். கடையில் உள்ள 53 பவுன் நகைகளை ஹால்மார்க் சீல் போடுவதற்காக பெண்ணாடத்தில் உள்ள நகைக்கடை பட்டறைக்கு பேருந்தில் ஜான்பாண்டியன் சென்றுள்ளார். புதுச்சேரி நோக்கி சென்ற அந்த அரசுப் பேருந்து கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நிறுத்தப்பட்டது.
அப்போது ஜான்பாண்டியன் அருகில் அமர்ந்து பயணித்த நபர் ஒருவர் திடீரென எதிர்பாராத விதமாக அவருடைய பையை பறித்துக் கொண்டு ஓடினார். மின்னல் வேகத்தில் ஓடிய நபர் பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பினார். இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பேருந்தில் இறங்கிய நபர் இறங்கிய உடனே இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளையாக இருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.