நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் என்று புதிய மாவட்ட அறிவிப்பு அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. அதில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியும் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து, வறட்சியான சங்கரன்கோவில் தொகுதியை வளமான தென்காசிப் பகுதிகளோடு இணைத்தல் கூடாது. நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் தொகுதியில் உட்பட்ட அனைத்துப் பிரிவினரும் கோரிக்கை வைத்தனர். வருவாய்துறை ஆணையர் சத்ய கோபாலின் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பை சங்கரன்கோவில் பகுதி மக்கள் பதிவு செய்ததை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வருவாய்துறை அமைச்சருக்கு வலுவான கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறார். அதில் தென்காசியை ஒட்டியுள்ள வளமான பகுதியைக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்ததை வரவேற்கிறேன்.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களில் அடங்கியுள்ள குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியப் பகுதிகள், சங்கரன்கோவில் நகராட்சி உள்ளிட்ட பகுதிகள், நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வகையில் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும். இந்தப் பகுதி மக்கள் அனைவரும், நெல்லைக்கு வந்து செல்லும் தூரம் குறைவு என்பதோடு, 24 மணிநேரமும் பல வழித்தடங்களில் போக்குவரத்து வசதியிருக்கிறது. மாறாக தென்காசியிலிருந்து இப்பகுதிகளுக்கு முழுமையான போக்குவரத்து வசதி கிடையாது. இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நகருக்கு கூட பஸ் வசதி கிடையாது.
மக்கள் இரண்டு மூன்று பஸ்களில் ஏறி இறங்கி செல்வதால் பயண நேரம் 3 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர். கல்வி, மருத்துவ மற்றும் அரசுப் பணி போன்ற சேவைகள், மற்றும் வேலை வாய்ப்புகள் சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு நெல்லையே உகந்ததாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கேற்ப சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வகையில் மாவட்டப் பிரிவினை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே அவர் தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் செப் 03- ம் தேதி அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது.