திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அதிலிருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு சென்றுள்ளது.
அவர் இதுப்பற்றி திருப்பத்தூர் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லியுள்ளார். அதன்படி டிசம்பர் 22ந்தேதி காலை, கொரட்டி கிராமத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் மண்ணை எடுத்து அதனை செயற்கை மணலாக தயாரித்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.
செயற்கை மணல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி உட்பட சில இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். அதோடு செயற்கை மணல் தயாரித்த பகுதியில் உருவாக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை உடைத்து எரிந்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஜே.சி.பி உள்ளிட்ட வாகனங்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு வருவாய்த்துறை சார்பில் புகார் தந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.