வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.இதற்கு 'ஃபெங்கல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் நாளை (30.11.2024) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த புயல் காற்றழுத்த தாழ்வாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகள் பொய்யாகும் நிலையில் புயல் சின்னம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உருவாகியுள்ள 'ஃபெங்கல்' புயலானது புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.