தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நர்சிங் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி திவ்யா கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி எஸ்.பி வடிவேல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மகள் திவ்யா தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று (12/02/2020) இரவு பணி முடித்துவிட்டு விடுதிக்கு வந்த மாணவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மற்ற மாணவிகள் இரவு பணியை முடித்துவிட்டு விடுதிக்கு சென்று கதவைத் தட்டும் பொழுது கதவு திறக்கப்படாததால் மாணவிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடி விடுதி காப்பாளரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து விடுதி காப்பாளர் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது திவ்யா ரூமில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி திவ்யாவுடன் இருந்த சக மாணவிகளிடம் கேட்டபோது, "அவருடைய பெரியப்பா இறந்ததால் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்." இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது பெரியப்பா இறந்துபோன மன உளைச்சலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் க.விலக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.