தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு அருகே வனப்பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் விளைபொருட்களை சரக்கு வாகனத்தில் எடுத்து செல்ல விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அனுமதி கொடுத்ததை வனத்துறை அதிகாரி மறைமுகமாக வீடியோ எடுத்தார்.
![Theni District Collector meeting -officer secretly took video](/modules/blazyloading/images/loader.png)
தேனி மாவட்டதில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லின் சச்சின் துக்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள வருசநாடு அருகே இருக்கும் பொம்முராஜபுரம். இந்திராகாலனி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர் பேசும் போது, "எங்கள் கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல்வேறு காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் விளை பொருட்களை தேனி, சின்னமனூர், ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் தற்போது வனத்துறையினர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சரக்கு வாகனம் வந்து செல்வதற்கு அனுமதிக்கின்றனர். தினமும் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு சரக்கு வாகனம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அதற்க்கு வன உயிரின காப்பாளர் பதில் அளிக்கையில், "இந்த கிராமங்களுக்கு நடந்து செல்வதற்கு மட்டுமே ஒரு மீட்டர் அகல பாதை வழங்கப்பட்டு உள்ளது. வன உயிரினங்கள் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் தான் வனப்பகுதி வழியாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் சரக்கு வாகனம் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது" என்றார். அப்படி இருந்தும் கூட தொடர்ந்து விவசாயிகள் இதே கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் என்ற நிலை உள்ளதால் விளைபொருட்கள் வீணாகி வருவதாக கூறினர்கள்.
உடனே வனத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் எதிரேமுன் வரிசையில் உட்கார்ந்து இருந்த உதவி வனகாப்பாளர் மகேந்திரனோ தனது செல் போன் மூலம் வனத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் பேசுவதை மறைமுக வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அதை கண்டு அருகே இருந்த மற்ற துறை அதிகாரிகளும் கூட எதற்க்கு சார் இப்படி மறைமுகமாக வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்க வேலையை பாருங்கள் என்று முகம் சுளித்து பேசி இருக்கிறார்.
அதன் பின் மற்ற துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் வனத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் சுமுகமாக பேசி உடன் பாடு ஏற்பட்டதின் பேரில் வாரத்தில் மூன்று நாட்கள் சரக்கு வாகனம் இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு எந்த நாட்களில் இயக்க வேண்டும் என்பதை விவசாயிகளே முடிவு செய்து கொள்ள கலெக்டர் அனுமதி அளித்தார். அதை கண்டு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்ததுடன் மட்டும்மல்லாமல் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து விட்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன்.மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் சரக்கு வாகனம் இயக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு கலெக்டரும் அனுமதி கொடுத்தார்.
இதையெல்லாம் தொடர்ந்து அந்த உதவி வனக்காப்பாளர் மகேந்திரன் மறைமுகமாக வீடியோ எடுத்தார். அதை கண்டு மற்ற அதிகாரிகளே மனம் நொந்து போய் விட்டனர். ஆனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்காக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி அங்கு விளையக்கூடிய பொருட்களை கொண்டு வருவதற்கு மூன்று நாட்கள் அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்கு விவசாயிகள் மத்தியில் கலெக்டரை ஒருபுறம் பாராட்டி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது வனத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியே கலெக்டர் பேச்சை மறைமுகமாக எதற்க்காக வீடியோ எடுத்தார் என்று அதிகாரிகள் மத்தியிலையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது
.