தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மாவட்டத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் மக்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், டாக்டர்களுடன் சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் பத்திரிகை துறையினரும் இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் இருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கரோனா இருப்பது கண்டு ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும் பெரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். அதுபோல் மத்திய சுகாதாரத்துறை கூட பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்,
தங்களின் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதோடு வெளியில் செல்லும்போது, முக கவசம் அணிந்து செல்லுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை தவறாது பின்பற்றவும் மேலும் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ தொடர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உதவிக்கு சுகாதாரத்துறை அலுவலரை அணுகிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பத்திரிகையாளர் நலன்கருதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதைக்கண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.