விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது சாரம் கிராமம். இங்கிருந்து ஈச்சேரி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் ரமேஷ் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையை முடித்துவிட்டு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு திண்டிவனம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அங்காளம்மன் கோயில் அருகே அவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த பணம், செல்போன் மற்றும் அவரது இரு சக்கர வாகனம், டாஸ்மாக் கடையின் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் ரமேஷ், ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதே டாஸ்மாக் கடையில் ஏற்கனவே பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
டாஸ்மாக் கடை கொள்ளை வழக்கிலேயே இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், தற்போது விற்பனையாளர் ரமேஷை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தபோது, மங்கலம் என்ற ஊருக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் ரமேஷின் இருசக்கர வாகனம் கேட்பாரற்று கடந்துள்ளது. அதை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.