சேலம் அருகே, ஜவுளிக்டை அதிபர் ஒருவர் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்திருந்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவான கடை மேலாளரை காவல்துறையினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்பாராம். இவருடைய மகன் ஆனந்த் (வயது 28). சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேச்சேரி, ஜலகண்டாபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆனந்தின் பூர்வீக மாவட்டத்தைச் சேர்ந்த பவானிபால் சிங் (வயது 24) என்ற வாலிபர் மேலாளராக வேலை செய்து வந்தார். ஒரே ஊர்க்காரர், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தன் குடும்ப உறுப்பினர் போலவே கருதி, சொந்த வீட்டிலேயே ஆனந்த் தங்க வைத்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், ராஜஸ்தானில் வசித்து வரும் ஆனந்தின் தந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரைப் பார்த்துவிட்டு வருவதற்காக ஆனந்த் ராஜஸ்தான் கிளம்பியிருக்கிறார்.
அப்போது தனது ஜவுளிக்கடைகளில் வியாபாரம் ஆனதன் மூலம் கிடைத்த 30 லட்சம் ரூபாயை மேலாளர் பவானிபால் சிங்கிடம் கொடுத்துவிட்டு, அத்தொகையை ஜவுளிகள் விநியோகம் செய்த நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், ஊர் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஜவுளிக்கடை அதிபரும் ஊரில் இல்லை; கையிலோ சுளையாக 30 லட்சம் ரூபாய் இருக்கிறது. பணத்தைப் பார்த்ததும் மதி மயங்கிய பவானிபால் சிங், பிப். 13ஆம் தேதியன்று ஜலகண்டாபுரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேராமக்களை அணைத்துவிட்டு, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
சொந்த மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆனந்த், ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினார். தன் மேலாளரும் காணவில்லை; பணத்தையும் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார்.
அவருடைய உத்தரவின்பேரில் இந்தப் புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பவானிபால் சிங் பணத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது தெரிய வந்தது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் ஜாலிபா கிராமத்தில் பதுங்கி இருந்த பவானிபால் சிங்கை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 22.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மீதப்பணத்தை அவர் செலவு செய்துவிட்டது தெரிய வந்தது.
சேலம் அழைத்து வந்த பவானிபால் சிங்கை, வழக்கமான விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.