நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடந்த ஒரு காளிகோயில் நிகழ்ச்சியில் காளி மாதா கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார் என்ற தகவல் பரவியதும் கூட்டம் கூடியது.
குறிப்பிட்ட நேரத்தில் ஹைடெக் காரில் வந்து இறங்கினார் அந்த காளி மாதா. சுடிதார், முக அலங்காரம், சிகை அலங்காரம், முடிகளில் வண்ணமயம், அடுக்கடுக்காய் நகைகள். காளி மாதா என்று சொன்னாங்க யாரோ ஒரு பெண் வருகிறாரே என்ற கேள்வி அனைவருக்குமே எழ, அந்த பெண்ணுக்கே மேளதாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
சிறிது நேரம் காளி சிலையை வணங்கிய பிறகு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது தன்னை யாரும் சாமி என்று சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார். “கனமழையால் பயிர்கள் நாசமாகிறது அதனைப் பார்க்க வந்தேன். இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்” என்றார்.
யார் இந்த காளிமாதா? என்ற நமது கேள்விக்கு.. கூட இருந்தவர்கள் கூறியதோ, ‘தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பவித்ரா. சின்னவயதிலேயே அவரது அப்பா திண்டுக்கல் போயிட்டார். அங்கே தான் எம்.ஜி.ஆர் இவருக்கு பவித்ரானு பெயர் வச்சார். வீட்டுக்கு பக்கத்திலேயே காளி கோயில் என்பதால் காளி மீதான பக்தி அதிகமாகிடுச்சு. பின்னாளில் ஜெ. முதல்வராக இருந்தப்ப அவங்களை பார்க்கப் போன பவித்ராவை பார்த்து தங்கத் தாரகைனு அழைத்ததாக பவித்ரா முன்னதாக ஒரு பேட்டியிலேயே சொல்லி இருக்காங்க.
காளிமாதாகிட்ட ஆசியும் ஒரு ரூபாய் காசும் வாங்கினதால தான் ஓ.பி.எஸ். முதல்வர் ஆனார் என்றும், எடப்பாடி தன்னை வரவேற்கவில்லை என்பதால் ஆட்சி இழந்தார் என்றும் கூட சொல்லி இருக்காங்க. எடியூரப்பா தொடங்கி திண்டுக்கல் சீனிவாசன் வரை காளிமாதாவோட பக்தர்கள் தான்’ என்றனர்.