தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் உத்தரவுப்படி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாத்தூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனியில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பர்மா காலனிக்கு விரைந்த போலீசார், அங்கு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி கடத்திய 4 பேரும் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்த முருக சடாசரம்(34), பழனிவேல்(34), கருப்பையா(60) புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வகணபதி(27) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கைது செய்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவரைத் தேடி வருகின்றனர்.