தமிழகத்தில் ஏற்கனவே கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் பெரிதாகி வரும் நிலையில் மாவட்டம்தோறும் தவறான தகவல்களை கொடுத்து கிசான் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளிடம் இருந்து லட்சக்கணக்கிலான பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டியதற்கு நன்றி என குடிசைப்பகுதி மக்களுக்கு கடிதம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் ஏற்கனவே பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக பொதுமக்களிடம் ரேஷன், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வாங்கிக்கொண்டு வீடு கட்டி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மோதிலால் தெருவில் உள்ள குடிசைப் பகுதி மக்களுக்கு தபால் கடிதங்கள் வந்துள்ளது.
அந்த கடிதத்தில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டி முடித்ததற்கு நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், வீடு கட்டித் தரவில்லை ஆனால் வீடு கட்டி தந்ததாகவும், வீடு கட்டியதற்கு நன்றி எனவும் கடிதம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு பெண்மணி கூறுகையில், ஒருமுறை எங்களிடம் மோடி திட்டத்தில் வீடு வந்து இருக்கிறது என்று கூறி எங்களிடமிருந்த ஆவணங்களை பெற்றுச் சென்றனர். ஆனால் அதன்பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு தகவலும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் கொஞ்சநாள் கழித்து இப்போது வீடு கட்டி முடித்தற்கு மிக்க நன்றி என அனுப்பியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக எந்த காசு பணத்தையும் நாங்கள் வாங்கவில்லை. வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி செய்யவில்லை. ஆனால் வீடு கட்டி முடித்ததாக தகவல் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
கஜா புயலில் வீடிழந்து தவித்துவரும் அந்த குடிசைப்பகுதி மக்களுக்கு இப்படி ஒரு கடிதம் வந்திருக்கும் இதே நாளில் தான் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை காணொளி மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். மேலும் "வெளிப்படைத் தன்மையுடன் வீடு வழங்கப்படுகிறது" எனவும் மோடி உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.