
சேலத்தில் ஒருதலை காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு சோளக்காட்டில் பதுங்கிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ளது கூடமலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகேசன் விவசாய வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நந்தினி, சரோஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இரு மகள்களும் விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசன் கூடமலையிலிருந்து கடம்பூர் செல்லும் சாலையில் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். முருகேசன் மகள் சரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகிருஷ்ணன் என்பவரின் மகன் சாமிதுரை கல்லூரி மாணவி சரோஜாவை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார். ஒருதலையாகக் மாணவி சரோஜாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி மாணவியின் ஊருக்கு செல்லும் சாமிதுரை, பேருந்தில் மாணவி சரோஜாவிடம் தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சாமி துரையை கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர். சாமிதுரையின் உறவினர்களும் கூட மலைபக்கம் இனி சாமிதுரை வரமாட்டான் என உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தோட்டத்திற்குச் சென்று வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்து சரோஜா மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்த நிலையில், சாமிதுரை கடந்த 3 நாட்களாக போலீசிடம் தப்பிக்க அதே ஊரில் உள்ள சோளக்காட்டில் பதுங்கி இருந்த நிலையில் உறவினர்கள் உதவியுடன் போலீசார் சாமிதுரையை கைது செய்தனர்.