
திருவண்ணாமலை மாவட்டம் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் 58 வயதான சுந்தர். இவருக்குத் திருமணமாகி மனைவி விவாகரத்து செய்துவிட்டுப்போனதால், தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத்தெருவில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்துவருகிறார். திருவண்ணாமலை காஞ்சி சாலையில் வசித்துவரும் சுமதி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தரின் மகன்களைப் பராமரிக்க வீட்டு வேலைக்கு வந்துள்ளார். பின்னர் சுந்தர் மற்றும் சுமதி இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் குடும்பம் நடத்திவந்துள்ளனர்.
சுமதிக்கு நிறைய பணம் மற்றும் பொருட்கள் கொடுத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தருக்கும் காதலி சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுமதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னர், இருவரையும் அழைத்து சமாதானம் செய்ய, சுமதிக்கு உதவி ஆய்வாளர் சுந்தர் பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து அந்த தகாத உறவைத் துண்டித்துள்ளார். இந்நிலையில், சுந்தருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தற்போது கணவனை இழந்த லட்சுமி உதவி ஆய்வாளர் வீட்டிலேயே தங்கி மற்றொரு காதலியாக மாறியுள்ளார்.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் சுந்தர் ஏற்கனவே இருந்த பழைய காதலியான சுமதியின் பெயரில் மாருதி 800 கார் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்தக் காரினை புதிய காதலியான லட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததுடன் வீடு, இடம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழைய காதலி சுமதி, ஜூன் 19ஆம் தேதி இரவு 12 மணியளவில் சுந்தரின் மகன்கள் வீட்டில் இல்லாத நிலையில், சுந்தரம் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளக்காதலி சுமதி, தான் வாங்கி வந்த பெட்ரோலை உதவி ஆய்வாளரின் கார், பைக் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த தீ மளமளவென சுந்தரின் கார், பைக் பின்னர் அவரது படுக்கையறை முதல் மாடி, மேல் மாடி என பரவியது. தீ அணலில் படுக்கையில் இருந்த திடுக்கிட்டு எழுந்த உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயால் கார், பைக் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுந்தர் வீட்டின் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் காதலி சுமதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் பழைய காதலி சுமதியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தகாத காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, உதவி ஆய்வாளர் வீட்டில் முன்னாள் காதலி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.