Skip to main content

ஆறுகளில் வரும் தண்ணீர் வாய்க்கால்களுக்கு வரவில்லையே... வேதனையில் விவசாயிகள்...

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

"எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையைத் திறந்து டெல்டா விவசாயத்தைக் காத்துவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, தண்ணீர் திறக்கப்பட்டு நாற்பது நாட்களைக் கடந்தும் நிலங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால்கள், சிறு முக்கிய ஆறுகளில் தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை என்பதைப் பற்றி பேசாமல் கடந்துவிடுவது ஏன், இதற்குக் காரணம் இடை இடையே நடக்கும் கட்டுமானப் பணிகளே காரணம்," என வேதனை கொள்கிறார்கள் விவசாயிகள்.

 

தஞ்சை, நாகை மாவட்டத்தின் கடைகோடி பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாருதல், கட்டுமானப் பணிகள் அவசரகதியில் நடந்து வருகிறது. கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மணியாறு, குமிக்கி மன்னியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் அவற்றின் கிளை வாய்க்கால்களிலும் பாலம், தடுப்பணை, பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது.

 

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டதுமே இந்தப் பணிகள் துவங்கியதால், பணிகளை முடிக்கமுடியாமலும், தண்ணீரை திறக்காமலும் இருக்கின்றனர்.

 

இதுகுறித்து விவசாயிகளிடம் விசாரிக்கும், "எப்பொழுதுமே மழைகாலம் முடிந்ததுமே கட்டுமானப் பணிகள், தூர்வாரும் பணிகள், குடிமராமத்துப் பணிகளைத் துவங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால் அ.தி.மு.க. அரசு அந்தப் பணத்தை முழுமையாக ஏப்பம் விடுவதற்காக தண்ணீர் திறக்கும் சமயத்தில் துவங்கி அவசரகதியில் கடமைக்குச் செய்துவிட்டு நிதிமுழுவதையும் முழுங்கிவிடுவார்கள். அதுபோலவே தான் இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாள்தான் பாலம், தடுப்பனை கட்டும் பனியைத் துவங்கினாங்க, தண்ணீர் திறந்தும் பாலம், தடுப்பணை தடுப்புச் சுவர் கட்டுமானப் பணிகள் நடப்பதால் அரசு செயற்பொறியாளர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தண்ணீரைத் திறக்க மறுக்கின்றனர். குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் சம்பாவிற்காவது வந்து சேருமா என்கிற கவலை எங்களுக்கு எழுந்திருக்கிறது. 

 

http://onelink.to/nknapp

 

திருப்பனந்தாள் அருகே உள்ள நெய்க்குப்பை பாலம் பாதியில் நிற்கிறது, நாங்கள் போராட்டம் நடத்தியதால் ஒருநாள் தண்ணீரைத் திறந்து கடைமடைவந்துவிட்டதாகக் கூறி அடைத்துவிட்டனர். தண்ணீருக்கு மேலே பாலம் கட்டும் பனி நடந்தால் அது எப்படித் தரமானதாக இருக்கும். அதேபோல் வேட்டமங்கலத்தில் நடக்கும் பாலம் அவசரகதியில் நடக்கிறது. அதற்கான மணலை கூட அங்கேயே தோண்டி எடுத்துக்கொள்கிறர்கள் " என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்