தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சோலை ராஜன். இவரது மனைவி செல்வராணி. இவர்கள் காலங்காலமாக செம்மறி ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த செம்மறி ஆடுகளை, பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் உள்ளே புகுந்து கடித்துக் குதறியது. இதில் 12 செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும் 10- க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து, உயிர் ஊசலாடுகிறது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ 2 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, சொர்ணக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.விஜயபாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.நாகராஜன் ஆகியோர் வட்டாட்சியர் மற்றும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர் ரவிச்சந்திரன், காவல்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சோலை ராஜன் கூறுகையில், "வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் இறந்து விட்டன. 10 ஆடுகள் பிழைக்குமா எனத் தெரியவில்லை. ஆடுகள் பலியானதால் எனக்கு சுமார் ரூ 2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண விவசாயியான என்னால் இந்த இழப்பை தாங்க முடியாது. அரசு எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார் கண்ணீரோடு....
இதே போல கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் கிடையில் உள்ள கூடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்து குதறிக் கொன்ற சம்பவம் நடந்தது.
மேலும் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூா் பகுதியில் பல பசுமாடுகளை ஒரு நாய் கடித்து குதறியுள்ளது. இப்படி கடந்த சில மாதங்களில் நாய்கள் கடித்து பல உயிர்கள் பலியான சம்பவம் பொதுமக்களை அச்சப்படுத்தியுள்ளது.