இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைப்பெற்ற தன் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு தஞ்சாவூரில் நடைப்பெற்றது. தஞ்சை விளாரில் உள்ள "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்" பழ.நெடுமாறன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர்,
இந்த முற்றம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் கோரங்களை சிற்பங்களாக கொண்டுள்ளது. சோகம் நிறைந்த இந்த இடத்திற்கு மூன்றாவது முறையாக வருகிறேன். நாளை உலக தமிழர்கள், முள்ளிவாய்க்கால் கொடூரங்களை உணர இங்கு கூட்டம், கூட்டமாக வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஈழத் தமிழர்களின் பெருங்கனவை வல்லரசு நாடுகள் இணைந்து சிதறடித்தன. தெற்காசியாவில் எதிரும், புதிருமாக ஆதிக்கம் செலுத்தும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள், இவ்விஷயத்தில் சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து செயலாற்றிய வினோதம் நடந்தது. ஐ.நா.சபை கண்டும், காணாமல் நிற்கிறது. பாலஸ்தீனர்களுக்கு துரோகம் செய்யும் ஐ.நா சபை, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை விடயத்திலும் துரோகம் செய்கிறது.
இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு தீமோரையும், சூடானிலிருந்து தெற்கு சூடானையும் இதே ஐ.நா.சபைதான் பொது வாக்கெடுப்பு நடத்தி பிரித்தது. ஐ.நா.சபை ஆளுக்கொரு நிலைபாட்டை எடுக்கிறது. அங்கு நீதி தடுமாறுகிறது.
இலங்கையில் யுத்தத்தின் போது பல கொடூரங்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஒரு கர்ப்பிணியான தமிழச்சியின் வயிற்றை தோட்டாக்கள் துளைத்தது. அந்த அதிர்வில் பிரசவித்த குழந்தைக்கு, தன் தாய் இறந்தது தெரியவில்லை.
நெஞ்சில் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிய ஒரு தமிழச்சியை குண்டு துளைத்தது. அவள் துடித்து இறந்தாள். தாய் இறந்தது தெரியாமல் அந்த குழந்தை பாலுக்காக தன் தாயின் மார்பை சுவைத்தது. இவையெல்லாம் தாங்க முடியாத கொடுமைகள்.
செர்பிய இனப் படுகொலைகளைகளையும், பாலஸ்தீன நெருக்கடிகளையும் பார்த்தவர்களுக்கு இதன் வலி புரியும். எனவே தான் இவற்றுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். அவர்களின் தியாகங்கள் வீண் போகாது. உண்மையும், உழைப்பும் அழியாது.
2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை அவர்கள் மெளனித்து விட்டார்கள். ஆனால் அவர்களின் உரிமைக்கான நியாயங்கள் தொடர்ந்து பயணிக்கிறது.
இப்போது இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அவர்களும், ஈழத் தமிழர்களும் கைக்கோர்க்க வேண்டும். சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க வேண்டும்.
முன்பு பழ.நெடுமாறனும், சிராஜில் மில்லத் அப்துல் சமது அவர்களும் சேர்ந்து ஈழத் தமிழின பிரதிநிதிகளையும், இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம் தலைவர்களையும் தமிழகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல் நடத்தினர். அதை இப்போதும் செய்ய வேண்டிய சூழல் வந்துள்ளது. அதை நாம் செய்வோம்.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தனது வெளியுறவு துறை கொள்கையை மறுபரிசீவனை செய்ய வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அங்கு அனைத்து இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்றைய சர்வதேச அரசியலை உள்வாங்கி, அதன்கேற்ப அறிவாயுதங்களை கையிலேந்தி நீதிக்காக போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வைகோ, பெ.மணியரசன், குடந்தை அரசன், தெஹ்லான் பாகவி, உள்ளிட்டோர் பேசினர். தனியரசு எம்எல்ஏ, புலவர் காசி ஆனந்தன், எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலர் அஹ்மது கபீர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் மஹ்ரூப், திருச்சி மாவட்ட செயலர் அஷ்ரப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும், பொதுச் செயலாளருடன் இம் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.