Skip to main content

பேரறிவாளன் விடுதலை எப்போது? சட்டசபையில் தமிமுன் அன்சாரி கேள்வி!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
Perarivalan thamimun ansari


சட்டபேரவையில் இன்று (05-06-18) மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, பேரறிவாளன் விடுதலை எப்போது என்று கேள்வி எழுப்பினார். சிறைத்துறை மானிய கோரிக்கையின் போது பதிலளித்து பேசிய, அமைச்சர் சி.வி சண்முகத்திடம் கேள்வி எழுப்பினார்.

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்வதாக வாக்களித்து, முதல் கட்டமாக 67 பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை இந்த அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 


அதே சமயம் நீங்கள் கூறக் கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்ட கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் உள்ளிட்ட 28 ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும் நான் முதல்வரிடமும், தங்களிடமும், அமைச்சர் வேலுமணியிடமும் கொடுத்துள்ளேன். அதுகுறித்து மனிதாபிமானத்துடன் பரீசிலிக்க வேண்டுகிறேன்.

அதுபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 02-03-16 அன்று மத்திய அரசுக்கு 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதினார். 

 

 


02-03-16 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு சார்பில் எழுதிய கடிதத்தின் மீது, 3 மாதங்களுக்குள் தனது பதிலை சொல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள்  அடங்கிய அமர்வு கடந்த 23-01-2018 அன்று உத்தரவிட்டது. அந்த காலக்கெடு 23-04-2018 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து இரு முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்கள்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை யாராலும் ஏற்க முடியாது, மிகப்பெரிய துயரம் அது. இந்தியாவில் மதவாத சக்திகள் வளர்வதற்கு அவரது இழப்பும் ஒரு காரணம். வலிமைவாய்ந்த ஒரு பன்னாட்டு செல்வாக்குமிக்க தலைவர் இதுவரை இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.

 

 


இதற்கு தடையாக இருப்பதாக சொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிலைபாடும் மாறியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூரில் கொடுத்த பேட்டியே அதற்கு உதாரணமாகும். சோனியா காந்தியின் குடும்பமும், இந்த அவையில் உள்ள காங்கிரஸ் நண்பர்களும் அதை எதிர்க்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், சுட்டிக்காட்டிய கைதிகள் விடுதலை குறித்து பரீசிலிக்கப்படும் என்றும், பேரறிவாளனின் விடுதலை உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்