Skip to main content

வேங்கை வயல் விவகாரம்; உண்மையைக் கண்டறியும் சோதனைக்கு வந்த சோதனை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
nn

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கியது. பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், பலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அப்பொழுதும் குற்றவாளிகளை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இறுதிக்கட்டமாக சிபிசிஐடி போலீசார் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமிட்டு அதற்கான அனுமதிக்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் முதற்கட்டமாக 10 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அந்த 10 பேர் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிபிசிஐடி போலீசாரின் உண்மையைக் கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கை புதுக்கோட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஒரு வருடத்தைக் கடந்த வேங்கை வயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் யார் எனக் கண்டறிய முடியாமல் விசாரணை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்