கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தரப்பு நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 108 பேர் கள்ளக்குறிச்சி சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ஆம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளி தரப்பில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆசிரியைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.