தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நூதனமான முறையில் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையானது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை காவலர்கள் வாக்கி டாக்கியில் பரிமாறிக் கொள்வதைப்போல காவலர்களின் நடமாட்டம் உள்ளதா இல்லையா என்பதை வாக்கி டாக்கி மூலம் பரிமாறிக் கொண்டு கஞ்சா விற்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஊத்துமலை பாறைக்காடு பகுதியில் போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓட்டம் பிடித்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதில் மூன்று பேர் மட்டுமே பிடிபட்டனர். பிடிபட்ட மூன்று இளைஞர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அரிவாள், கத்தி, செல்போன் உள்ளிட்ட பொருட்களுடன் வாக்கி டாக்கியும் இருந்தது. விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அந்த கும்பல் போலீசாரின் நடமாட்டம் குறித்து சக விற்பனையாளர்களுக்கு தகவல்களை தெரிவிக்க வாக்கி டாக்கியை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த சேலம் மாநகர அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.