![temple was locked due to disagreements among Naga fishermen](http://image.nakkheeran.in/cdn/farfuture/H8hGr65_BM2s0O-A_lV1QeAIa1B1kh-7bl-oXO70At8/1662959832/sites/default/files/inline-images/1894.jpg)
நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய பால் அபிஷேகம் செய்வதில் இரு தரப்பு மீனவ பஞ்சாயத்துதாரர்களிடையே கருத்து வேறுபாடு எற்பட்டதால் சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு கோவில் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராம முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனால் ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டு, ஆவணி கடை ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.
![temple was locked due to disagreements among Naga fishermen](http://image.nakkheeran.in/cdn/farfuture/ws2barRv0sINdQqd9u8ai8NVw5Uk4zoZ56HRV8CeXhY/1662960054/sites/default/files/inline-images/1895_0.jpg)
திருவிழா நடத்த 30 பஞ்சாயத்துதாரர்களில் ஒரு தரப்பினரான 18 பேர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் மீதமுள்ளோர் கையெழுத்திடவில்லை. இதனால் இருதரப்பினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(11.9.2022) அதிகாலையிலிருந்து பெண்கள், ஆண்கள் என கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது. பாலாபிஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் பூட்டப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் தீயாக பரவியதோடு, பாலாபிஷேகம் செய்ய வந்த பக்தர்களும் கோவிலை திறக்க கூறி வலியுறுத்தி வந்தனர்.
![temple was locked due to disagreements among Naga fishermen](http://image.nakkheeran.in/cdn/farfuture/TOSKZvtq8z_Fe5bbo1_u0qKk7UleJxPm2yLNIXpmKBw/1662960078/sites/default/files/inline-images/1896.jpg)
இதனை தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களிடம் நாகை வட்டாட்சியர் கார்த்திகேயன், டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி 12 மீனவ பஞ்சாயத்துதாரர்களிடம் கையொப்பம் பெறப்பட்டத்தை தொடர்ந்து கோவில் முகப்பு கதவு திறக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.