தெலுங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்று ஒன்றரை வருடம் முடிந்த நிலையில், தமிழக பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் சந்தித்து மனம் திறந்து பேசினார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இறுதியாகப் பேசிய டாக்டர் தமிழிசை, ‘’கவர்னராகப் பொறுப்பேற்றதுமே என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. குறிப்பாக, பா.ஜ.க.வை சேர்ந்த நான், பா.ஜ.க. அல்லாத அரசுடன் எப்படி ஒத்துப்போவேன் என்பதுதான். அது குறித்து பத்திரிகையாளர்களும் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நான், அரசு நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன். நிர்வாகம் ஆரோக்கியமாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டிய விசயங்களுக்கு ஒப்புக் கொள்வேன். தவறுகள் நடந்தால் அதனைச் சுட்டிக்காட்டுவேன். மக்கள் நலன் சார்ந்து, பிரச்சனையின் அடிப்படையில் எங்களின் உறவு ஆரோக்கியமாக இருக்கும் எனச் சொன்னேன். அப்படித்தான் இப்போது வரை எனது கவர்னர் பணி இருக்கிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ராஜ்பவன், வெறும் கவர்னர் மாளிகையாக இல்லாமல், மக்கள் பவனாக இருந்தது. தினமும் ராஜ்பவனிலிருந்து உணவுகள் சமைக்கப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. கரோனாவை எதிர்கொள்வது குறித்து ஒரு டாக்டராகவும் மக்களுக்கு எனது ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறேன்.
விமானப் பயணத்தில் ஒருமுறை ஒரு இளைஞர் என்னிடம் வந்து, "அக்கா, நான் ஒரு மீம்ஸ் கிரியேட்டர். உங்களைப் பற்றி நிறைய மீம்ஸ் போட்டிருக்கிறேன்" எனச் சொன்னபோது, "என்னுடைய உருவத்தையும், சுருட்டை முடியையும், கறுப்பு நிறத்தையும் கிண்டல் செய்கிற மாதிரி மீம்ஸ் போடுறீங்களே, சரியா? என்னைக் கிண்டல் செய்வதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?" எனச் சிரித்துக் கொண்டே கேட்டேன், அதற்கு அவர், "உங்களைப் பற்றி மீம்ஸ் போட்டால்தான் லைக்ஸ் அள்ளுது அக்கா. அதன் மூலம் வருமானம் எனக்கு கிடைக்குது" என சொல்ல,"வருமானமெல்லாம் கெடைக்குதா?" என ஆச்சரியப்பட்டேன்.
விமானத்தை விட்டு இறங்குபோது, ஸாரி அக்கா, இனி உங்களை கிண்டல் பண்ற மாதிரி மீம்ஸ் போடமாட்டேன் எனச் சொன்னார். அப்போ நான், "என்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை; உனக்கு வருமானம் வருது இல்லே! உன் மீம்ஸை கண்டினியூ பண்ணு" எனச் சொன்னேன். இது தான் நான்.
என் தலை முடி சுருட்டைதான். அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. முடிதான் எனக்கு சுருட்டை; ஆனா, யாருடைய பணத்தையும் நான் சுருட்டியதில்லை. கறுப்பு நிறத்தை கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள். நான் கறுப்புதான்; ஆனா, என்னிடம் கறுப்பு பணம் கிடையாது. இங்கு பேசிய பத்திரிகையாளர்கள், செகண்ட் இன்னிங்சில் இங்கு வேறு பதவி காத்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். எனக்கு எதிலும் ஆசையில்லை. ஆண்டவனும், ஆள்பவர்களும் எனக்கு கொடுக்கிற பணியைச் செய்கிறேன். இன்றைக்கு எனக்கு என்ன பணி கொடுக்கப்படுகிறதோ அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்! எனது கடமை பணி செய்வது மட்டுமே! பலனை எதிர்பார்ப்பதில்லை.
அறிஞர் அண்ணாவும் உருவத்தில் குள்ளம்தான். ஒருமுறை மேடையில் அவர் பேசும் போது உயரம் குறைவாக இருந்ததால், ஒரு தொண்டர் ஓடிவந்து சோடா பாட்டில் நிரம்பியிருந்த டப்பாக்களிலிருந்த பாட்டில்களை எடுத்து கீழேவைத்து விட்டு அந்த டாப்பாக்களை அடுக்கி வைத்திருக்கிறார். அதன் மீது ஏறி நின்று பேசிய அண்ணா, தொண்டனால் உயர்ந்திருக்கிறேன் என்றாராம். அதே போல தொண்டர்களால் உயர்ந்தவள் நான்.
அரசியலில் பெண்கள் வருவதும் அதில் சாதிப்பதும் அவ்வளவு எளிதானது இல்லை. என்னை மாநிலத் தலைவராக நியமித்த மறுநாளே, இவரை மூணு மாசத்துல மாத்திடுவாங்கன்னு சொன்னாங்க. மாத்திடுவாங்க; மாத்திடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, பாஜக தலைவராக அதிக வருடங்கள் இருந்தது நான்தான். தலைவராக நான் இருக்கும் போது எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம். பல நாட்கள் இரவு முழுவதும் தூங்கியதே கிடையாது. அப்போதெல்லாம் எனக்கு ஆதரவாக இருந்தவர் எனது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் தான்.
தமிழக மக்கள் என் மீது எவ்வளவு அன்பும் பாசமுமாக இருக்கிறார்களோ அதேபோல தெலுங்கானா மக்களும் என்மீது அன்பாக இருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்க ஆசைப்பட்டேன். அதுதான் இந்தச் சந்திப்பு!‘’ என்று மனம் திறந்து பேசினார் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.