அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அரசு, ஆசியர்களுக்கு அடிக்கடி பயிற்சிகள் வழங்கி வருகிறது. இந்த வகையில் தற்போது காலாண்டு விடுமுறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நேற்று 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களுடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக நடக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்தப் பயிற்சிக்காகவே காலாண்டு விடுமுறையை காலநீட்டிப்பு செய்துள்ள நிலையில், போராட்டத்தால் பயிற்சியும் பெற முடியாமல் பள்ளி திறக்கும் போது வகுப்புகள் நடத்த உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இனி வரும் காலங்களில் தனியாக நடத்தப்படுமா அல்லது பயிற்சியே இல்லாமல் பாடம் நடத்த வலியுறுத்தப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் கடந்த 2 நாட்களாக சுமார் 800 இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போலத்தான் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்தப் பயிற்சியில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.