நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறிய ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹரேந்திர ராஜாக் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் உரையாடும் போது, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மக்கள் சாப்பிடும் வகையில் இல்லை எனப் பேசியிருக்கிறார். மேலும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் ஆசிரியர் ஹரேந்திர ராஜாக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் வீட்டில் உரையாடும் போது, ஆசிரியர் கூறியதை பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் மாணவர்களின் பெற்றோர் முசாப்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஒரு அரசு பணியாளரோ, அதிகாரியோ தங்கள் பணியிடத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது. அப்படி இருக்கையில் ஆசிரியர் பேசியது விதிமீறல் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.