தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்த வயதான ஆசிரியத் தம்பதியர் அருணாச்சலம் ஜாய்சொர்ணதேவி. கடந்த ஜூன் 30- ஆம் தேதி அன்று இரவு தம்பதியர் வீட்டிலிருந்தபோது மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி 150 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், 10 லட்சம் ரொக்கம் என 58 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தை அதிர வைத்தது. அதுகுறித்த செய்தி நக்கீரன் இணையத்திலும் வெளியாகியிருந்தது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜின் உத்தரவுப்படி, ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம் குற்றவாளிகளைத் தேடினர். தெருமுனை மற்றும் வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த தனிப்படை பாவூர்சத்திரம் அருகேயுள்ள சந்தனகுமார்பட்டி மாரியப்பனைப் பிடித்து விசாரணை செய்ததில், ஆசிரியர் அருணாச்சலம் தன் வீட்டிற்கு எதிரே 4 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு கடையில் மாரியப்பன் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார். அதுசமயம் தம்பதியர் வீட்டில் தனியாக இருப்பதையும், நகைகள் பணம் உள்ளதையும் தெரிந்து கொண்டவர் திட்டமிட்டு தன் கூட்டாளிகளோடு கொள்ளையடித்துள்ளார். கொள்ளைப் பொருட்களை தேனியில் மறைத்துவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனிப்படையினர் கூட்டாளிகளான குமரி மாவட்டத்தின் முட்டத்தைச் சேர்ந்த ஜான்விமல் சதீஷ், சென்னை பச்சரைவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், பூந்தமல்லி நசரத்பேட்டை வாஜாகத் அலி, தேனியைச் சேர்ந்த நல்லுசாமி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்டதில் தேனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 பவுன், மூன்றரை லட்சம் பணம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் கொள்ளையடித்த பணத்தில் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் வளமாக இருந்தது அவரைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.