ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கே.என் நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தற்போது மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்திவருகின்றனர். எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட இருப்பதாக எஸ்ஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள ராக்போர்ட் நகரில் அமைந்துள்ள எஸ்ஐடி அலுவலகத்தில் இதற்கான அறிவிப்பை எஸ்.பி ஜெயகுமார் வெளியிட்டார். சரியான தகவல் தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று கூறி அதற்கான தொலைபேசி எண்களையும் அவர் வெளியிட்டார். எஸ்.பி. ஜெயக்குமார் 9080616241 டிஎஸ்பி மதன் 9498120467 - 7094012599