கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (08/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாநகர எல்லைக்குள் இருக்கும் மால்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் செவ்வாய்பேட்டை மெயின் ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்கிலி ரோடு, லீபஜார், பால் மார்க்கெட், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 06.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், வ.உ.சி. மார்க்கெட், சின்னக்கடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறிக்கடைகள் மாலை 06.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், குளிர்சாதன வசதிப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கணாபுரம், வீரகனூர் வார சந்தைகள் வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்கா வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.