கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே- 7 ஆம் தேதி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மே- 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 44 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் கடை முன் குவிந்தனர்.
இதனால் மே- 7 ஆம் தேதி அன்று மட்டும் ரூபாய் 172 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியது. இரண்டாவது நாளான நேற்று (மே- 8 ஆம் தேதி) மட்டும் ரூபாய் 122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூபாய் 32.45 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
அதேபோல் திருச்சி மண்டலத்தில் ரூபாய் 31.17 கோடியும், சேலம் மணடலத்தில் ரூபாய் 29.09 கோடியும், கோவை மண்டலத்தில் ரூபாய் 20.01 கோடியும், சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 9.28 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 294.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டாஸ்மாக் கடைகளைத் திறந்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (08/05/2020) விசாரணைக்கு வந்தபோது ஊரடங்கு முடியும் வரை (மே- 17 ஆம் தேதி) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் மதுபானங்களை டோர் டெலிவரி செய்யலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.